சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதலமைச்சர் விஜய் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் குற்றம் சாட்டி வருகிற 31-ஆம் தேதியன்று திமுக மகளிரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சேலத்தில் பட்டப்பகலில் பொது இடத்திலேயே கொலை நடந்திருப்பதாகவும், மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது மர்மமாகவே உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், தவெக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு Free Run கிடைத்தது போல அச்சமின்றிக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருப்பதாகவும் சாடியுள்ளார். சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர், சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதலமைச்சர் விஜய் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? எனவும் வினவியுள்ளார்.
திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
திமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும்,
பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளிய தவெக அரசை கண்டித்து வருகிற 31-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.