Minister Nirmalkumar On Anbil Mahesh: திமுகவின் கோரிக்கையை ஏற்று ஒரு கோப்பையை திறந்ததற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என, அன்பில் மகேஷ் கைது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Minister Nirmalkumar On Anbil Mahesh: திமுக சொன்னபடி அனைத்து ரூல்ஸ்களையும் பின்பற்றியே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் நிர்மல்குமார், “ஒரு கோப்பை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் அதுவும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய அவமானம். அவர்கள் கைவைக்காத இடமே இல்லை. ஆனால், தற்போது பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சான்றிதழில் கூட கட்சி நிதி வாங்கப்பட்டுள்ளது.
”குழந்தைகளுக்கான சான்றிதழில் லஞ்சம்”
பொதுமக்கள் பெரும்பாலானோருக்கு கட்சி நிதி என்றால் என்னவென? சந்தேகம் கொண்டுள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் ஒரு சான்றிதழ்க்காக, அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளி நிர்வாகங்களை மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் குற்றச்சாட்டு. இப்போது தான் பள்ளி நிர்வாகங்கள் பலவும் தைரியமான முன்வந்து புகார்களை அளித்து வருகின்றன. இவர்கள் விட்டுவைக்காத பள்ளிகளே இல்லை. இப்படி ஒரு சான்றிதழ் உள்ளது என எத்தனை பேருக்கு தெரியும்? ஒரு சான்றிதழில் ஒரு ஆண்டிலேயே 400 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்யப்பட்டுள்ளது.
”ஸ்டாலினுக்கு வெட்கமே இல்லையா”
இதே முன்னாள் துணை முதலமைச்சர், முதலமைச்சர் தான் கோப்புகளை திறங்கள், திறங்கள் என வலியுறுத்தினர். ஒரே ஒரு கோப்பை தான் தற்போது முதலமைச்சர் விஜய் திறந்துள்ளார். ஒரு கோப்புக்கே இவ்வளவு பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறீர்கள். கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஸ்டாலின் அறிக்கை கொடுக்கிறார். குழந்தைகளுக்கான சான்றிதழில் கூட திருட்டுத்தனம் செய்து பணம் வசூலிப்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும். ஆனால், அதைவிட்டுவிட்டு கரூர் விவகாரத்திலேயே வழக்கு போட்டிருக்க வேண்டுமென, நீதிமன்ற வளாகத்திலேயே திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர். எனில் அவர்கள் கரூர் சம்பவத்திலேயே திட்டமிட்டுள்ளனர். இதற்காக தான் அன்பில் மகேஷ் அன்று நாடகம் போட்டாரா? இந்த அளவிற்கு கேவலமானவர்கள் தான் திமுகவினர்.
”பல கோப்புகள் விசாரணையில் உள்ளன”
கட்சி நிதி எப்படி வசூலிக்கப்பட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். முதலமைச்சருக்கு சவால்விட்டதன்படி, இன்னும் பல கோப்புகள் விசாரணையில் உள்ளன. அரசு வேலை வாங்கி தருவதாக கே.என். நேரு தொடர்புடைய துறையில் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த விசாரணைக்கு எதிராக அவர் நீதிமன்றத்தை நாடினார். தவறு செய்யாவிட்டால் விசாரணையை எதிர்கொண்டு குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டியது தானே. நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது தொடர்ந்து விரைவில் அந்த வழக்கில் விசாரணை தொடங்கப்படும். முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். அவர்கள் சொன்னபடியே ரூல்ஸ் பின்பற்றப்பட்டு ரூல்ஸ்படி அனைத்து விசாரணையும் நடைபெறும்.
அன்பில் மீது கைது நடவடிக்கை ஏன்?
நேற்று இரவு 1.30 மணி வரை சிறையில் அடைக்கக் கூடாது என திமுகவினர் போராடினர். அதிகாரமிக்க நபரை கைது செய்யாவிட்டால் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் எப்படி முன்வந்து புகார் கொடுப்பார்கள். அண்ணாநகர் ரமேஷ் உட்பட சாட்சி சொல்ல வந்த பலருக்கும் என்ன ஆனது என அனைவருக்கும் தெரியும். 2ஜி விவகாரத்தில் எத்தனை பேர் மறைந்தார்கள், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என எல்லாம் தெரியும். எனவே அவர்களை காவலில் எடுத்தால் தான் பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகார் அளிப்பார்கள். யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை இதுவல்ல. செய்த தவறுக்கான விளைவு தான் இது” என அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.