திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் காலை எலி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் கால் விரலை எலி கடித்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்
திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்த அரசு மருத்துவமனையில் சமீப காலமாக எலித்தொல்லை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் கல்கண்டார்கோட்டை அருகே உள்ள ஆலந்தூரைச் சேர்ந்த தமிழ்க்கொடி என்ற 68 வயது மூதாட்டி ஒருவர் கால் முறிவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் சாதாரண வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ்க்கொடியின் கால் விரலை எலி கடித்துள்ளது. ஏற்கனவே அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் எலி கடித்ததை அவர் உணரவில்லை. ரத்தக்கசிவு கண்டு உறவினர்கள் பார்த்தபோது தான் இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது. உடனடியாக நோயாளிக்கு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், கழிவுநீர் கால்வாய், தின்பண்டங்களின் எச்சம் போற்றவற்றால் எலிகள் வருகிறது. இதுபோன்ற சுகாதரமற்று இருக்கும் மருத்துவமனைகள் விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இந்நிலையில் திருச்சி சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?
இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.