DMK Mk Stalin: நீட் தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் CJP அமைப்பினரின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
DMK Mk Stalin: திமுக தலைவர் ஸ்டாலினின் அறிக்கையில் ராகுல் காந்தியின் கைதுக்கோ, மாணவர்களின் மீதான தாக்குதலுக்கோ, மத்திய அரசுக்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக CJP அமைப்பினர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டங்கள் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு, பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
”நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்”
சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கு வழிகாட்டி, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது: #நீட்ஒழிப்பு . மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என திமுக தலைவர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீட்டை தடை செய்யுங்கள், மாணவர்களை காப்பாற்றுங்கள் என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக எதிர்ப்பை கைவிடும் திமுக?
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கண்டனம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசு நடத்தும் தேர்வில் முறைகேடு நடந்ததாக தான் இந்த ஒட்டுமொத்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அரசை நோக்கி எந்தவொரு கேள்வியையும் ஸ்டாலின் முன்வைக்கவில்லை. இதுபோக, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் கைதுக்கும் ஸ்டாலின் கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை. இதனால், மாநிலத்தில் அதிகாரத்தை இழந்த திமுக, தங்களை தற்காத்துக்கொள்ள பாஜக எதிர்ப்பு அரசியலை முழுமையாக கைவிட தொடங்கிவிட்டதா என்று பேச்சு தீவிரமடைந்துள்ளது.
திமுகவிற்கு ஆதரவாக பாஜக..
இதனிடையெ, திமுக எம்.எல்.ஏ., மார்கண்டேயன் கைதுக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு சட்டப்பேரவை தலைவரின் அனுமதி தேவையில்லை என்ற ஜேசிடி பிரபாகரின் விளக்கத்தை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “இந்திய நாடாளுமன்ற முறைக்கு அடிப்படையாக ஹவுவாண்ட் சத்தர் (Kout and Shaddar)கோட்பாடுகள்படி எந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ கைது செய்யப்படும்போது, குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட அவைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு மட்டுமல்ல, விதிமுறைகளும் ஆகும். இதை மறந்துவிட்டு, தமிழ சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் துலாக்கோல் போல் நடுநிலமையில் இல்லாமல் ஆளும் கட்சிக்கு சாதகமாக சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை” என கூறுவதை ஏற்கமுடியாது என பேசியுள்ளார். நயினார் நாகேந்திரனின் அறிக்கை, பாஜகவிற்கு திமுக நெருக்கமாவதையே காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் பேசுகின்றனர்.