CM Vijay Speech: திமுகவை கரூர் கேங், ஃப்ராட், ஊழல்வாதிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகர்கள் என, அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடுமையாக சாடியுள்ளார்.
CM Vijay Speech: திமுக இருக்கும் இடத்தில் தான் தவறே நடக்கும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவை கடுமையாக சாடிய முதலமைச்சர் விஜய்:
காவல், தீயணைப்புஉள்ளிட்ட துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது திமுக ஆட்சியில் வழக்குகள் பதிவு செய்யாமல் தாமதப்படுத்தியதோடு, பல்வேறு துறைகளில் ஊழல் கரைபுரண்டு ஓடியதாகவும் குற்றம்சாட்டினார். அதுகுறித்து பேசுகையில், டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பேசினார். அப்போது, “செய்யும் தவறையே, சட்டவிரோதமான செயல்களையே ஒழுங்காக, முறைப்படுத்தி திமுக செய்துள்ளது. விஞ்ஞான ஊழல் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இது தான் அது. திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை பற்றி பேசுகையில் அமலாக்கத்துறை பயன்படுத்திய வார்த்தைகளை கவனிக்க வேண்டும். முறைகேடு, மோசடி, ஏமாற்றுதல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது கரூர் கேங், ஆர்கனைஸ்ட் க்ரைம் சிண்டிகேட், நேர்மறையற்ற நோக்கம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் கேட்டீர்களே, போதுமா? – விஜய்
இதையெல்லாம் இப்போது சொன்னால் உச்சநீதிமன்றம் தான் ஜாமின் கொடுத்துவிட்டதே என்பார்கள். ஜாமின் நிராகரித்த உயர்நீதிமன்றமும் சரி, ஜாமின் கொடுத்த உச்சநீதிமன்றமும் சரி வழக்கை விசாரிக்க வேண்டாம் என சொல்லவே இல்லையே. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொன்னதற்கு என்ன அர்த்தம்? இரண்டு துறைகளின் கோப்புகளை திறந்ததற்கே இந்த நிலைமை என்றால், இன்னும் மற்ற துறைகளின் கோப்புகளை திறந்தால் என்ன ஆகும்? ஆதாரம் வேண்டும், ஆதாரம் வேண்டும் என்றீர்களே இந்த ஆதாரங்கள் போதுமா?
”தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்”
இந்த உலகத்தில் இரண்டு வகைபட்ட மக்கள் உள்ளனர். தவறு செய்து அதில் மாட்டிக்கொள்பவர்கள் ஒருபக்கம், தவறிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என எல்லாம் தயார் செய்துவிட்டு மாட்டிக்காத வகையில் செயல்படுபவர்கள் இரண்டாவது பக்கம். நமது நண்பர்கள் இரண்டாவது வகையானவர்கள். திமுக மேடையில் இருக்கும்போது, “திமுக இருக்கும் இடத்தில் தவறே இருக்காது, தவறு நடக்கும் இடத்தில் திமுகவே இருக்காது” என சிலர் பெருமையாக பேசிக்கொள்கின்றனர். அதை நான் சற்று உல்டாவாக சொல்கிறேன். திமுக நடக்கும் இடத்தில் தான் தவறே நடக்கும். தவறு நடக்கும் இடத்தில் திமுகவே இருக்கும்” என முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.