சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்து உஷாராக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் -எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.